அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டாவை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களில் சென்னை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் உத்தரவுப்படி, அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க இந்த 5 மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர். மேலும், 5 மாவட்டங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை, நெல்லையிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இது தவிர தேவைக்கேற்ப சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் வகையில், 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறும், வெள்ள பாதிப்பு ஏற்படாத மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.