நாளை முதல் பொருட்காட்சி..! இரண்டு தினங்களுக்கு இலவச என்ட்ரி..! முழு விவரம்…
தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2 அல்லது 3-வது வாரத்தில் சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சி தொடங்கப்படும். சென்னை தீவுத்திடலில் 70 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும். இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பொருட்காட்சியை ஜனவரி 12ஆம் தேதி தொடங்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்திருந்தது.
அதன்படி, 48-வது இந்தியா சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்த பொருட்காட்சியை நாளை மாற்றும் நாளை மறுதினம் (ஜனவரி 12,13 ஆம் தேதிகளில்) பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியவர்களுக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு குறைவானோர் பொருட்காட்சியை பார்க்க கட்டணம் இல்லை என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சியில் அரசுத் துறைகளைச் சேர்ந்த அரங்குகள், பொதுத் துறைஅரங்குகள், மத்திய அரசின் அரங்குகள், பிற மாநில அரசுகளின் அரங்குகள் என 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும்,100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள்,மேஜிக் அரங்குகள், பறவைகள் கண்காட்சி, சிறுவர்கள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள், பொழுதுபோக்கு மேடை நிகழ்ச்சிகள் எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை தொடங்கவுள்ளதால் இந்த பொருட்காட்சிக்கு பலத்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.