செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டினை வெளியிட்டு, புதிய வலைதளத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், ”சர்வதேச அளவிலான மாநாடு இதுவே முதல் முறை. கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 23 மருத்துவ சிறப்பு பிரிவு சார்ந்த மருத்துவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தேசிய அளவிலும் சிறந்த மருத்துவர் நிபுணர்களும் கலந்து கொள்கின்றனர். 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 இளங்கலை மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற புதிய நடைமுறையை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர்
மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் விளைவாகவே தற்போது தேசிய மருத்துவ ஆணையம் அதை நிறுத்தி வைத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் பிரச்சனைகளே ஏற்பட்டுள்ளன. இன்று சில பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இன்று மாலை செந்தில் பாலாஜிக்கு என்ன பாதிப்பு என்பது குறித்த பரிசோதனை முடிவுகள் வந்தபின், அதற்கான சிகிச்சை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.