மீண்டும் சிக்கலில் சிக்கிய மாஜி அமைச்சர் வளர்மதி..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக, சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, கடந்த 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வளர்மதி விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த விசாரணைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் வளர்மதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்மதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முடித்து வைக்கப்பட்ட வழக்கு 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் ரீ ஓப்பன் செய்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் வளர்மதி எந்த சொத்தும் வாங்கவில்லை என தெளிவாக்கப்பட்டது.
அதேவேளையில் அவரது மகன் மற்றும் கணவர் தொழிலதிபர்கள். அவர்கள் அவர்களின் வருமானத்தில் தான் சொத்து வாங்கி இருக்கின்றனர். ஆனால், அதையும் வளர்மதி சொத்து குவித்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தால் ரீ ஓப்பன் செய்யப்படுகிறது. அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து தற்போதைய நிலை குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டும், உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.