'உனக்கு இதுதான் டா சம்பளம்’..!! பட்டியலினத்தவர் வாயில் செருப்பை திணித்து கேவலப்படுத்திய பெண் முதலாளி..!!
குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை விபூதி படேல் என்ற பெண் நடத்தி வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் விபூதி படேல் உள்ளூர் பிரபலமாகவும் விளங்கி வந்திருக்கிறார். இவரது டைல்ஸ் நிறுவனத்தில் நிலேஷ் தல்சானியா என்ற 21 வயது இளைஞர் அக்டோபர் 2ஆம் தேதியன்று பணியில் சேர்ந்துள்ளார். விளக்கம் ஏதுமின்றி அக்டோபர் 18ஆம் தேதியன்று பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனால், தான் பணியாற்றிய சுமார் 15 நாட்களுக்கான ஊதியத்தை விரைவில் வழங்குவார்கள் என நிலேஷ் காத்திருந்தார். ஆனால், இரண்டு வாரங்கள் ஆன பிறகும் தல்சானியாவை எவரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, தனது முன்னாள் முதலாளியான விபூதி படேலுக்கு தால்சானியா போன் செய்துள்ளார். மறுமுனையில் பதிலளித்த விபூதி படேல், தான் ஊர் திரும்பியதும் நேரில் வந்து சம்பளத்தை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதன்படி, தனது சகோதரர் மெஹுல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான பவேஷ் மக்வானா ஆகியோருடன் டைல்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு தல்சானியா சென்றுள்ளார். அங்கே வைத்து டிடி ரபாரி, ராஜ் படேல், ஓம் படேல், பரீக்ஷித் உள்ளிட்டோர் தல்சானியாவையும் அவருடன் வந்தவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதிர்ச்சியில் தல்சானியா மற்றும் உடன் வந்த இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். அப்போது விபூதி படேல் தனது பெல்ட் மற்றும் காலணியை கழற்றி தல்சானியாவை தாக்கியுள்ளார்.
மேலும், சாதிய அவதூறுகளை சகட்டுமேனிக்கு வீசியவர் அதன் உச்சமாக, ’உனக்கு இதுதான் ஊதியம்’ என்று தல்சானியாவின் வாயில் தனது செருப்பைத் திணித்திருக்கிறார். அதிகாரம், பணம் மற்றும் ஆள்படையுடன் இருக்கும் முன்னாள் முதலாளிக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத தல்சானியா வேதனையும், அவமானத்துடன் அங்கிருந்து திரும்பினார்.
உடன் வந்தவர்கள் வலியுறுத்தியதன் பேரில் மோர்பி காவல்நிலையத்தில் முறையிட்டிருக்கும் தல்சானியா, மேற்கண்ட விவரங்களை தனது புகாரில் விரிவாகத் தெரிவித்திருக்கிறார். புகாரை பெற்ற போலீஸார், விபூதி படேல் மற்றும் அவரது ஆட்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.