விஜய் அரசியல் வருகை.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு கருத்து.!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளுக்கு இடையேயான மோதலும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
கடந்த காலங்களில் ஒரே அணியில் பயணித்த பாஜக மற்றும் அதிமுக இந்த வருட தேர்தலுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்ததிலிருந்து இந்த இரண்டு கட்சிகளுக்குமான வார்த்தை போர் உச்சத்தை எட்டி இருக்கிறது. சமீபத்தில் பாஜகவிற்கான கூட்டணிக் கதவு அடைக்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜகவிற்கு துரோகம் இழைத்ததாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுபோன்று அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இவரது கட்சி தொடர்பான அறிவிப்பு மற்றும் பெயர் வெளியிடும் நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. விஜயின் அரசியல் வருகைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர்.
அப்போது பாரதிய ஜனதா கட்சி குறித்த கேள்விகளை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி அது தொடர்பான கேள்விகளை அந்தக் கட்சியின்ரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார். மேலும் தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் கட்சி தொடங்கலாம் அதற்கு முழு உரிமையும் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுகவின் ஆட்சியில் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அதிமுகவிற்கு வெற்றியை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.