எவரெஸ்ட், MDH மசாலா பொருட்களுக்கு மேலும் ஒரு நாட்டில் தடை!… எத்திலீன் ஆக்சைடு சோதனை தீவிரம்!
Nepal: இந்திய மசாலா பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH ஆகியவற்றின் இறக்குமதி, நுகர்வு மற்றும் விற்பனைக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை MDH மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்களின் மசாலா கலவைகளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி என்று வகைப்படுத்தப்படும் எத்திலீன் ஆக்சைடு(ethylene oxide) அதிக அளவில் இருப்பதை கண்டறிந்த பிறகு, இந்த கவலைகள் எழுந்தன. அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பிற நாடுகளும் இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகின்றன. மசாலா உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா, இதுவரை இந்த நிலைமை குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்தநிலையில், இந்திய மசாலா பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH ஆகியவற்றின் இறக்குமதி, நுகர்வு மற்றும் விற்பனைக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. தயாரிப்புகளில் அதிக அளவு எத்திலீன் ஆக்சைடு தடயங்கள் இருப்பதாக செய்தி வெளியானதை அடுத்து, நேபாளம் இந்த இரண்டு மசாலா பிராண்டுகளுக்கும் தடை விதித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது, அதன் விற்பனையையும் நாங்கள் தடை செய்துள்ளோம் என்று நேபாள உணவு தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரண்டு குறிப்பிட்ட பிராண்டுகளின் மசாலாப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து சோதனைகள் நடந்து வருகின்றன. இறுதி அறிக்கை வரும் வரை தடை தொடரும் என்றும் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் அறிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் 0.73 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை EtO பயன்பாடு அனுமதிக்கப்படுவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெவ்வேறு நாடுகளால் EtO பயன்படுத்துவதற்கு ஒரு தரநிலை வகுக்கப்பட வேண்டும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் இந்தியாவின் மொத்த மசாலா ஏற்றுமதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. இதற்கிடையில், இந்திய மசாலா வாரியம் இந்த பிராந்தியங்களுக்கு இந்திய மசாலா ஏற்றுமதியின் பாதுகாப்பையும் தரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: ரேஷன் கார்டு தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்!! ஈஸியாக விண்ணப்பித்து வாங்குவது எப்படி?