"உங்கள் இதயத்துடிப்பு கூட துல்லியமாக கேட்கும்.." உலகில் சத்தமே கேட்காத ஒரு அறை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா.?
கம்ப்யூட்டர் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கி வந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின், மற்றும் ஒரு சாதனைகளில் ஒன்றாக இருப்பது அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகவும் அமைதியான அறையாகும். இந்த அறை உலகின் மிக அமைதியான அறையாக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.
இந்த அறை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்டின் தலைமையகத்தில் அமைந்திருக்கிறது. முற்றிலும் ஒலிப்புகாத பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த அறையின் கட்டுமான பணிகள் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. சத்தத்தின் அளவானது டெசிபல் என்ற அளவீடு முறையில் அளக்கப்படுகிறது. இந்த அளவீட்டின்படி மனிதன் பேசும் சத்தம் 60 டெசிபல் ஆகும். மேலும் இலைகள் அசையும் ஓசை கூட 20 டெசிபலாக இருக்கிறது. மனிதன் மூச்சு விடும் சத்தம் 10 டெசிபல் அளவு என கணக்கிடப்பட்டுள்ளது.
எந்த சத்தமும் இல்லாமல் இருப்பது 0 டெசிபல். ஆனால் இந்த அறையில் சத்தத்தின் அளவு -20 டெசிபலாக இருப்பது அல்ட்ரா சென்சிட்டிவ் பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு சத்தமே இல்லாமல், நிசப்தத்தையும் மீறிய அமைதியுடன் இந்த அறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு உலகின் மிக அமைதியான அறையாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இந்த அறை இடம் பெற்றுள்ளது.
இந்த அறைக்குள் இருக்கும்போது நமது இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் மற்றும் வயிற்றில் உணவுகள் ஜீரணிக்கப்படும் சத்தம் ஆகியவற்றை கூட மிக துல்லியமாக கேட்க முடியும் என ஒலி ஆர்வலர் ஸ்டீவ் ஆர்ஃபீல்ட் தெரிவிக்கிறார். மைக்ரோசாஃப்ட் இந்த அறையை கட்டுவதற்கு முன் ஸ்டீவ் ஆர்ஃபீல்ட் அமைத்த லேபிள் ஆர்ஃபீல்ட் அறை தான் உலகின் மிக அமைதியான அறை என்ற சாதனையைப் படைத்திருந்தது. இந்த அறையின் டெசிபல் அளவு -13 ஆகும். இவரது சாதனையை மைக்ரோசாஃப்ட் முறியடித்துள்ளது.
இந்த அறையில் ஒருவரால் 45 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருக்கும்போது நிசப்தமான அமைதியின் காரணமாக அமானுஷ்ய உருவங்கள் நம் முன் தோன்றுவது போன்ற மாயை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர். ஒலி உள்ளே செல்லாதவாறு ஆறு அடுக்கு காங்கிரீட் மற்றும் இரும்பு பில்லர்களைக் கொண்டு இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒலி எதிரொலிக்காமல் இருப்பதற்கு தரை மற்றும் கட்டிடத்தின் மேற்பகுதிகளில் பைபர் கிளாஸ்களும் ஒலியை உறிஞ்சும் கேபிள்களும் பொருத்தப்பட்டுள்ளது.
மைக்ரோ போன்கள் ஹெட்போன்கள் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அவற்றில் இருந்து வரும் ஒலியின் தரத்தை பரிசோதனை செய்வதற்கும் மைக்ரோசாஃப்ட் இந்த அறையை பயன்படுத்தி வருகிறது. டச் டேப்லட் கேமிங் சிஸ்டம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் போன்றவையும் ஸ்கைப் வீடியோ கால் போன்ற செயலிகளின் தரமும் இந்த அறையால் மேம்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் பயனர்களுக்கு உயர்தர வசதிகளை வழங்குவதற்கு இது போன்ற வசதிகளை செய்திருப்பதாக மைக்ரோசாஃப்ட் பொறியாளர் தெரிவித்துள்ளார்