மனைவியின் அனுமதி இல்லாமல் உறவு கொண்டால் அது பலாத்காரம்!… நீதிமன்றம் அதிரடி!
கணவராகவே இருந்தாலும் பெண் ஒருவரின் அனுமதி இல்லாமல் உறவு கொண்டால் அது பலாத்காரம் தான் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருமகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் பெண் ஒருவர் ஜாமீன் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது அந்த பெண்ணின் கணவரும் மகனும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மருமகளைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதை அவர்கள் ஆபாச தளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதற்கு அந்த மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்த மாமியார் கைதான நிலையில், அவர் ஜாமின் கோரியிருந்தார்.
இந்த வழக்கில், நீதிபதி திவ்யேஷ் ஜோஷி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பதை தற்போது நம்மிடம் இருக்கும் டேட்டாவை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் மோசமான வன்முறை அரங்கேறிய பிறகும் அதே ஆபத்தான சூழலில் பெண்கள் இருக்க வேண்டியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "பாலோ செய்வது, ஈவ்-டீசிங், ஆபாசமாகப் பேசுவது, தாக்குவது, துன்புறுத்தல் ஆகியவற்றை சிறிய குற்றங்களாகப் பார்க்கிறோம். கவலைக்குரிய வகையில் பலரும் நார்மலாக்கிவிட்டனர். கொடுமை என்னவென்றால் படங்களில் இவை எல்லாம் ஆகச் சிறந்த காரியங்கள் என்பது போலக் கூட காட்டுகிறார்கள். என்ன ஆனாலும் ஆண்கள் ஆண்களாகவே இருப்பார்கள் என்ற கோணத்தில் குற்றங்களைப் பார்க்கும் மனப்பான்மை மற்றும் அவர்களை மன்னிக்கும் மனப்பான்மை சமூகத்திலும் இதனால் பாதிக்கப்படுவோருக்கும் மிக மோசமான ஆபத்தையும் தீங்கையும் ஏற்படுத்துகிறது" என்று அதில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் தான் இந்த கருத்துகளைக் கூறி, அந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதி மேலும் கூறுகையில், ""பெரும்பாலான வழக்குகளில் (ஒரு பெண்ணைத் தாக்குவது அல்லது பலாத்காரம் செய்வது) போன்ற கொடூரச் செயல்களைக் கணவர் செய்தால் அவர் தண்டிக்கப்படுவதில்லை. அவனுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை ஆண் என்பது ஆண் தான்.. பலாத்காரம் என்பது பலாத்காரம் தான்.. கணவனே மனைவியைப் பலாத்காரம் செய்தாலும் அது பலாத்காரம் தான்.
அரசியலமைப்புச் சட்டம் பெண்ணை ஆணுக்குச் சமமாகக் கருதுகிறது மற்றும் திருமண உறவில் இருவரையும் சமமாகவே பார்க்கிறது. ஆனால், நமது நாட்டில் பாலின வன்முறை என்பது கலாச்சாரத்தில் மறைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவமற்ற நிலை இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிந்த நபர்களாலேயே நடக்கிறது. ஆனால், சில காரணங்களால் பெண்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை" என்றார்.
மேலும், பெண்கள் தங்கள் மவுனத்தைக் கலைத்து புகார் அளிக்க முன் வர வேண்டும் என்ற நீதிபதி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன் நியூசிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், போலாந்து உள்ளிட்ட நாடுகளில் பலாத்காரம் செய்தால் கணவரையும் தண்டிக்க விதிகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.