உடம்பில் சிறு காயம் கூட ஏற்படக்கூடாது...! காவல்துறைக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவு...!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை எப்படி அழைத்துச் செல்கிறீர்களோ, அதேபோல நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து இதுவரை 16 பேரை கைது செய்தனர். கொலைக்கான மூல காரணம், மூளையாக செயல்பட்டவர், பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தகுழுக்கள், அதில் உள்ளவர்கள் என அனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிகரன் ஆகிய 4 பேரையும் மீண்டும் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் மனு அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீசன் சிறையில் அடைக்கப்பட்ட ஹரிகரனுக்கு மட்டும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கி, மீதம் உள்ள 3 பேருக்கும் தலா 3 நாள் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோர், தங்களையும் என்கவுண்டர் செய்ய உள்ளதாக நீதிபதியிடம் கூறினர். இதனையடுத்து உதவி ஆணையரை எச்சரித்து, உத்தரவாத கையெழுத்து பெற்று காவல்துறை காவலுக்கு அனுப்பினார். எப்படி அழைத்துச் செல்கிறீர்களோ, அதேபோல நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். உடம்பில் சிறு காயம் கூட ஏற்படக்கூடாது, சரியான நேரத்தில் சாப்பாடு வழங்க வேண்டும் என கூறி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.