யூரோ 2024!. டென்மார்க் - சுலோவேனியா அணிகளுக்கிடையேயான போட்டி டிரா!.
Euro 2024: நேற்று நடைபெற்ற 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுலோவேனியா அணிகள் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்த தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள, இந்தத் தொடரில் போட்டியை நடத்தும்ஜெர்மனி, நடப்பு சாம்பியனான இத்தாலி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, அல்பேனியா அணிகள் உள்ளன.
‘சி’ பிரிவில் ஸ்லோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் அணிகளும், ‘இ’ பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவேக்கியா, ருமேனியா, உக்ரைன் அணிகளும் ‘எஃப்’ பிரிவில் துருக்கி, ஜார்ஜியா, போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலாஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தநிலையில் ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் 'நம்பர்-21' டென்மார்க் அணி, 57வது இடத்தில் உள்ள சுலோவேனியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் ஒரு கோல் அடித்தார். இதற்கு, சுலோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சுலோவேனியா அணிக்கு 77வது நிமிடத்தில் எரிக் ஜான்சா ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
இதேபோல், நேற்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள போலந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. வோல்க்ஸ்பார்க்ஸ்டேடியன் ஹாம்பர்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் போலந்து 16வது நிமிடத்தில் ஆடம் புக்ஸா ஹெடர் மூலம் கோல் அடித்தது. போட்டி முடிவில் 2-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தி நெதர்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: பெரும் சோகம்!. சுட்டெரிக்கும் வெயில்!. 19 ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழப்பு!.