யூரோ 2024!. உணர்வுப்பூர்வமான போட்டி!. 3-0 என்ற கணக்கில் ருமேனியா வெற்றி!. உக்ரைனை வீழ்த்தி சாதனை!
Euro 2024: ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் உக்ரைனை வீழ்த்தி ருமேனியா வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரின் 17-வது பதிப்பு ஜெர்மனியில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள, இந்தத் தொடரில் போட்டியை நடத்தும்ஜெர்மனி, நடப்பு சாம்பியனான இத்தாலி, கடந்த முறை 2-வது இடம் பிடித்த இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை A,B,C,D,E,F என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் நேற்று(ஜூன் 17) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இ பிரிவில் இடம்பெற்ற ருமேனியா - உக்ரைன் அணிகள் மோதின. போட்டியின் 7 வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ஆர்டெம் கொடுத்த பந்தை வாங்கிய விக்டர், இடது காலால், வலையை நோக்கி அடித்தார். இதை ருமேனிய கோல் கீப்பர் புளோரின் நிடா தடுத்தார். 29 வது நிமிடம் டென்னிஸ் மான் கொடுத்த 'பாசை' பெற்ற நிக்கோல் ஸ்டான்சியு, வலது காலால் அடித்து கோலாக மாற்றினார். முதல் பாதியில் ருமேனியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ரஸ்வான் மரின் மற்றும் டெனிஸ் மிஹாய் டிராகஸ் ஆகியோர் 2 கோல் அடித்து அசத்தினர். இதன் பின் உக்ரைன் அணியினர் பலமுறை முயற்சித்த போதும், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் ருமேனிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 24 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வியத்தகு முறையில் வென்ற பிறகு ஒரு பெரிய போட்டியில் ருமேனியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இரு அணி வீரர்களுக்கும் இது ஒரு உணர்வுப்பூர்வமான போட்டியாக இருந்தது. எட்டு ஆண்டுகளாக ஒரு பெரிய போட்டியில் ருமேனியாவின் முதல் தோற்றம் இதுவாகும், முன்னதாக, தேசிய கீதம் ஒலித்தபோது பல வீரர்கள் கண்ணீருடன் இருந்தனர்.
இதேபோல், மற்றொரு லீக் ஆட்டத்தில், 'சி' பிரிவில் உள்ள உலகத்தரவரிசையில் 4வது இடத்திலுள்ள இங்கிலாந்து அணி, 33வது இடத்திலுள்ள செர்பியாவை சந்தித்தது. போட்டி துவங்கிய 13வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம், தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். 77 வது நிமிடம் இங்கிலாந்தின் ஹாரி கேன், தலையால் முட்டிய பந்தை செர்பிய கோல் கீப்பர் ராஜ்கோவிச் தடுத்தார். 82வது நிமிடம் செர்பிய வீரர் துஷான் அடித்த பந்தை இங்கிலாந்தின் பிக்போர்டு தடுக்க, சமன் செய்யும் வாய்ப்பு நழுவியது. முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்றது.
இதேபோல், ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'இ' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-3' பெல்ஜியம் அணி, 48வது இடத்தில் உள்ள சுலோவாகியா அணியை எதிர்கொண்டது. கடைசி நிமிடம் வரை போராடிய பெல்ஜியம் அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சுலோவாகியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 4 வது போட்டியில், ரூப் டி மோதலில் ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Readmore: நாடு முழுவதும் இன்று விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000…!