யூரோ 2024!. விறுவிறுப்போட்டி!. ஜெர்மனி, போர்ச்சுகல் அணிகள் த்ரில் வெற்றி!.
Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களில் ஜெர்மனி, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றிவாகை சூடின.
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நேற்று நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-16' ஜெர்மனி அணி, 26வது இடத்தில் உள்ள ஹங்கேரி அணியை சந்தித்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஹவர்ட்ஸ் கோல் அடிக்க முயற்சித்த பந்தை ஹங்கேரி கோல்கீப்பர் பீட்டர் குலாசி தடுத்தார். பின் 22வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜமால் முசியாலா ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ஜெர்மனி அணிக்கு 67வது நிமிடத்தில் இல்கே குண்டோகன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஹங்கேரி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஜெர்மனி அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து, 'ரவுண்டு-16' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.
இதேபோல், மற்றொரு ஆட்டத்தில், செக் குடியரசை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி 'திரில்' வெற்றி பெற்றது. நேற்று நடந்த 'எப்' பிரிவு போட்டியில் 'பிபா' தரவரிசையில் 6 வது இடத்திலுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல், 36வது இடத்திலுள்ள செக் குடியரசு அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 11வது நிமிடத்தில் சக வீரர் ரபேல் லியாவோ கொடுத்த பந்தை, தலையால் முட்டி கோலாக்க முயன்றார் ரொனால்டோ. பந்து வெளியே செல்ல வாய்ப்பு நழுவியது. 32வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த பந்தை, செக் குடியரசு கோல் கீப்பர் ஜின்ரிச் ஸ்டானெக் தடுத்தார். 39 வது நிமிடம் முரட்டு ஆட்டம் ஆடிய போர்ச்சுகல் வீரர் ரபேல் லியாவோ, 'எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் 55வது நிமிடம், 'பிரீ கிக்' வாய்ப்பில் ரொனால்டோ அடித்த பந்தை, கோல் கீப்பர் ஜின்ரிச் தடுத்தார். போட்டியின் 62வது நிமிடம் விளாடிமிர் கவுபால் கொடுத்த பந்தை பெற்ற லுகாஸ் புரோவோத், வலது காலால் உதைத்து கோலாக மாற்றினார். செக் குடியரசு அணி 1-0 என முன்னிலை பெற்றது.
69 வது நிமிடம் கோல் கீப்பர் ஜின்ரிச் பந்தை தடுக்க, இதை வெளியே தள்ள முயன்றார் செக் குடியரசின் ராபின் ஹரனாக். துரதிருஷ்டவசமாக பந்து வலைக்குள் செல்ல, 'சேம் சைடு' கோல் ஆனது (ஸ்கோர் 1-1). 78 வது நிமிடம் ரொனால்டோ கொடுத்த பந்தை வாங்கிய விடினா, கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். இதை அங்கிருந்த செக் குடியரசு கோல் கீப்பர் ஜின்ரிச் ஸ்டானெக் தடுத்தார். 87 வது நிமிடம் போர்ச்சுகலின் தியாகோ கோல் அடித்தார். 'வார்' தொழில்நுட்பத்தில் இது 'ஆப்சைடு' எனத் தெரியவர கோல் அனுமதிக்கப்படவில்லை.
இரண்டாவது பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+2வது நிமிடம்), மாற்று வீரராக விளையாடிய போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கன்செய்காவோ, இடது காலால் பந்தை உதைத்து கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
Readmore: பெண்களே..!! வீட்டிலிருந்து மாதம் ரூ.30,000 வருமானம் பெறலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!