ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எதிரொலி..!! பொங்கல் பரிசுத் தொகுப்பு ரத்து..!! ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்..!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றவுள்ளது. பிப்.8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஏற்கனவே பெற்றிருந்த மக்கள் நியாய விலைக் கடைகளுக்கு இன்று காலை வருகை தந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் வழங்கப்படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.