நெருங்கும் பொங்கல்...! போக்குவரத்து தொழிற்சங்க போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்...!
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பணியாளர்களுக்கும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் 152 வது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதும், அலைக்கழிப்பதும் திமுக அரசின் தொழிலாளர் நலன் விரோதப் போக்கையே வெளிக்காட்டுகிறது.ஆறு அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றால் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பொதுமக்கள் பொங்கல் பண்டிகையின் போது எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.