குட் நியூஸ்..! விளையாட்டு வீரர்களுக்கான 3 % இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வேலைவாய்ப்பு...!
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நம் முதலமைச்சர் கடந்த 3 வருடங்களில் மட்டும், 3 ஆயிரத்து 350 விளையாட்டு வீரர்களுக்கு, 110 கோடி ரூபாய் அளவுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள். முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால், முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு, அரசுப்பணி வழங்க இருக்கிறோம் என்பதை கூறிக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தமிழ்நாடு முதலமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாயை வழங்கி தொடங்கி வைத்தார்கள். ஏழை எளிய மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் பயனடைய விரும்பும் வீரர்கள், TNCF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இந்த அறக்கட்டளை மூலமாக கடந்த 2 ஆண்டுகளில், 680 வீரர்களுக்கு 12 கோடி அளவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளோம். சமீபத்தில் பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். நம்முடைய தங்கை துளசிமதி, மாரியப்பன் தங்கவேலு உள்பட நான்கு வீர்ர்கள் பதக்கம் வென்று வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் நம் முதலமைச்சர் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்களின் படிப்புக்கு ஏற்ப ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுகிறார்கள். நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு வீரர்கள் தங்கி பயிற்சி பெற சேலத்தில் விடுதி அமைத்து தர ரூ.7 கோடி மதிப்பீட்டில் 60 வீரர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் விரைவில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அமைக்க அனுமதி வழங்கியுள்ளார் என கூறினார்.