புரட்டிப்போட்ட மழை வெள்ளம் : இயல்பு நிலைக்கு திரும்ப 544 மில்லியன் டாலர்களை இறக்கியது எமிரேட்ஸ்!
மழை வெள்ளத்தால் சேதமடைந்தவற்றை சீரமைக்க அவசர ஒதுக்கீடாக, அமெரிக்க டாலர் மதிப்பில் 544 மில்லியன் டாலரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் மழை பொழிந்தது. அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் 75 ஆண்டுகளில் மிக அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது எனக் கூறியது. விமானங்கள் ரத்தானதில் உலகின் பரபரப்பான துபாய் விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளை முடக்கிப் போட்டது. மழை வெள்ளத்தால் சேதமடைந்தவற்றை சீரமைக்க அவசர ஒதுக்கீடாக, அமெரிக்க டாலர் மதிப்பில் 544 மில்லியன் டாலரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
கனமழையினால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு சேதத்தை பதிவு செய்வதற்கும், தீர்வுகளை முன்மொழிவதற்கும் கேபினட் அமைச்சர்கள் இரண்டாவது குழுவை உருவாக்கினார்கள். இது தொடர்பாக ஷேக் முகமது வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிலைமை அதன் தீவிரத்தில் முன்னோடியில்லாதது. ஆனால் நாங்கள் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்ளும் நாடு" என்று இடர்களை எதிர்கொள்ளும் சவாலோடு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
துபாய் விமான நிலையம் 2,155 விமானங்களை ரத்து செய்தது; 115 விமானங்களை திருப்பி அனுப்பியது. சர்வதேச பயணங்கள் இதுவரை இயல்புக்கு திரும்பவில்லை. "சேவைகள் மற்றும் நெருக்கடி நிர்வாகத்தில், நியாயமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது மீண்டும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அமீரகத்தின் பிரபல ஆய்வாளர் அப்துல்கலெக் அப்துல்லா நேற்று ட்வீட் செய்திருந்தார்.
தீவிர வானிலை நிகழ்வுகளில் புவி வெப்பமடைதலின் பங்கை மதிப்பிடுவதில் நிபுணரான ஃப்ரீடெரிக் ஓட்டோ கூறுகையில் ”இந்த மழைப்பொழிவு மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்துக்கு உதாரணம்" என்று உறுதியாக தெரிவித்துள்ளார். தன் வரலாற்றில் முதல் முறையாக பேரிடர் மேலாண்மை குழு அமைத்துள்ளது அமீரகம்.