அதிகரிக்கும் போர் பதற்றம்.. அடுத்த 48 மணி நேரத்திற்கு இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்..!!
லெபனானுடனான நாட்டின் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இஸ்ரேல் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், இதனால் அங்கே அவசர நிலையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீட்டித்து வருகிறது. ஹமாஸை முழுமையாக அழிப்போம் எனச் சொல்லி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம் ஹமாஸ் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதைத் தற்காப்புச் செயல் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாலேயே நாங்கள் இந்த தற்காப்புச் செயலில் ஈடுபட்டோம். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இருக்கிறோம். எங்கிருந்து அவர்கள் இஸ்ரேலைத் தாக்கத் திட்டமிட்டு இருந்தார்களோ அந்த இலக்குகளை மட்டுமே தாக்கியுள்ளோம்" என்றார்.
இந்தத் தாக்குதல் காரணமாக தெற்கு லெபனானின் பகுதிகளில் வசிப்பவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில் இன்றைய தினம் நெதன்யாகு தலைமையில் இஸ்ரேல் அமைச்சரவை நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்களால் எங்கு அப்பகுதியில் பிராந்திய போர் வெடிக்குமோ என்ற அச்சமும் பலருக்கும் எழுந்துள்ளது.
Read more ; பாகிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமருக்கு அழைப்பு..!! மோடி செல்வாரா?