’அவசர சிகிச்சை பிரிவுகளில் எப்போதும் மூத்த மருத்துவர் இருக்க வேண்டும்’..!! ’தனி சட்டம் தேவையா’..? தேசிய பணிக்குழு அறிக்கை..!!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசிய பணிக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், "மருத்துவமனையின் அளவைப் பொறுத்து சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் மருத்துவமனையின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட வேண்டும். சிசிடிவி கேமராக்களின் பதிவு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சேகரித்து வைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனை வளாகம் முழுவதும் அவசர அறிவிப்புகளை ஒலி பெருக்கி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகளில் எப்போதும் மூத்த மருத்துவர் இருப்பது அவசியம் என்று தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ நிபுணர்களுக்கு எதிரான குற்றங்களைச் சமாளிக்க தற்போதுள்ள தண்டனைச் சட்டங்களின் விதிகள் போதுமானவை. மருத்துவ நிறுவனங்களில் வன்முறையைக் கையாள்வதற்காக பல்வேறு மாநிலங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. அத்தகைய சட்டங்கள் இல்லாத நிலையில், பாரதீய நியாய சன்ஹிதாவின் விதிகள் இத்தகைய குற்றங்களுக்கு தீர்வு காண முடியும்.
அன்றாட சிறு குற்றங்களை நிவர்த்தி செய்ய மாநில சட்டங்கள் போதுமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. எனவே, சுகாதார நிபுணர்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்கு ஒரு தனி மத்திய சட்டம் தேவையில்லை. மருத்துவ நிபுணர்களுக்கு எதிரான குற்றங்களைச் சமாளிக்க இருபத்தி நான்கு மாநிலங்கள் சிறப்புச் சட்டங்களை இயற்றியுள்ளன என்று தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.