மக்களே...! மின் கட்டண உயர்வு... 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுமா...? தமிழக அரசு முக்கிய தகவல்...!
வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022 செப்டம்பர் 9-ம் தேதி மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது. அதேபோல கடந்த ஜூன் 30-ம் தேதி கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்பட்து. தற்போது, 2024-25 ஆண்டுக்கான மின் கட்டணத்தை பணவீக்க விகித அடிப்படையில் மாற்றியமைத்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆகவும், 401-500 யூனிட் வரை ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 501-600 யூனிட் வரை ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 801-1000 யூனிட் வரை ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு வசதிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்துக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதே போல, வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.