இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின் விநியோகம்...! வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு....!
பிரதமரின் இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
பிரதமரின் இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் திட்ட அமலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் இம்மாதம் 18-ம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக 2026-27 ஆம் நிதியாண்டு வரை 75,021 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சூரிய தகடுகளை நிறுவுவது, குறித்த நேரத்தில் சோதனை மேற்கொள்வது, தேவையான மின் அளவீட்டு கருவிகளை கையிருப்பில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அமலாக்க முகமை என்ற அமைப்பிடம் மின் விநியோக நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
வீடுகளின் கூரைகளில் சூரிய மின்தகடுகளை அமைப்பதற்கான இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையாக 4,950 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை அளவை காட்டிலும் கூடுதல் திறனுடன் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளை நிறுவும் நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத் தொகை பொருந்தும்.