தூள்... மின்சார வாரியம் புதிய மொபைல் செயலி அறிமுகம்...! இனி புகார் செய்ய கவலை இல்லை
மின்சார களப்பணியாளர்களுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள், கட்டணம் செலுத்திய இணைப்புகள், உள்ளிட்ட பல்வேறு புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு பிரிவில் களப்பணிகளை மேற்கொள்வோருக்காக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டணம், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், பழுதான மீட்டர்களை மாற்றுதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட சேவைகள் தொடர்பான தரவுகள், புகைப்படங்களை பதிவு செய்வதோடு, சரிபார்க்கவும் முடியும்.
இந்த செயலி மூலம் களப்பணியாளர்களுக்கான பணிகளை உதவிப் பொறியாளர் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், மின் நுகர்வோரின் புகார்கள், சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கு நேரடியாக சென்று சேர்ந்துவிடும். அதே போல சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த செயலியில் மக்கள் எப்போது வேண்டுமானாலும் கட்டணம், புகார் தெரிவிக்கலாம். 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.