ஜார்கண்ட் தேர்தல் : இலவச சிலிண்டர் முதல் வேலை வாய்ப்பு வரை.. பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித்ஷா..!!
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில்,
* கோகோ தீதி (Gogo Didi) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கப்படும்.
* தீபாவளி மற்றும் ரக்ஷாபந்தன் தினங்களில் இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
* ரூ. 500க்கு சிலிண்டர்கள் வழங்கப்படும்.
* ஜார்கண்ட் இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* ஜார்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். ஆனால், பழங்குடியினருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது
அவர் மேலும் கூறுகையில், "ஊழல் நிறைந்த ஆட்சி வேண்டுமா இல்லை வளர்ச்சி தரும் பிரதமர் மோடியின் பாஜக ஆட்சி வேண்டுமா என்பதை ஜார்க்கண்ட் மக்கள் முடிவு செய்ய வேண்டும். அந்நியர்களின் ஊடுருவலை அனுமதிப்பதன் மூலம் ஜார்க்கண்டின் அடையாளம், நிலம் மற்றும் பெண்களை ஆபத்தில் தள்ளும் அரசு வேண்டுமா அல்லது எல்லைகளைப் பாதுகாக்கும் பாஜக அரசு வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
ஊடுருவல்காரர்கள் இங்கு வந்து எங்கள் பெண் பிள்ளைகளை ஏமாற்றி திருமணம் செய்து நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். இதைத் தடுக்கவில்லை என்றால் ஜார்கண்ட் கலாச்சாரம் மகள்கள் இல்லாமல் போவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த ஊடுருவல்காரர்களை நாங்கள் விரட்டுவோம். இதற்கான தனிச் சட்டம் கொண்டு வந்து பெண்களிடம் இருந்து பறித்த நிலத்தைத் திருப்பி கொடுப்போம். ஹேமந்த் சோரன் அரசு ஜார்கண்ட் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.