Lok Sabha 2024 | அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.! பொதுமக்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகள் பட்டியல்.!
இந்திய மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி புரியும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி ஆகியவற்றை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 3 மணி அளவில் தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் பொது தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்குரிய கடைசி நாள் மார்ச் 30 என தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டதால், தேர்தல் விதி நாடு முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதி அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தேர்தல் முடியும் வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனி நபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகளும் தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். மேலும் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கோரிக்கை தொடர்பான தினக் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நடைபெறாது.