ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!
நீலகிரியில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்தார். மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பகுதியான தாளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்துக்கு சென்றார். இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அவர் சந்தித்தார். பின்னர் வயநாடு புறப்பட்டு செல்லும் அவர் சுல்தான் பத்தேரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.