தொண்டர்கள் குஷி... பானை சின்னம் ஒதுக்கீடு... விசிக-வை மாநில கட்சியாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்...!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.
கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக தேர்தல் அரசியலில் போட்டியிட்டது விசிக. அப்போது, தமாகாவுடனான கூட்டணியில் பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்தார் திருமாவளவன்.தொடர்ந்து 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தார்.
அடுத்தடுத்த காலகட்டத்தில் வெற்றியும், தோல்வியையும் மாறி மாறி பெற்ற விசிக, கடந்த மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் மற்றும்பானை சின்னத்தில் போட்டியிட்டது. வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட்டதால் இரு தொகுதிகளையும் வென்ற நிலையிலும் விசிகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். அல்லதுபேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத வாக்குகளை பெற வேண்டும்.
இந்த நிலையில் தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கடந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. எனவே தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.