எகிறப்போகும் மொபைல் ரீசார்ஜ்..... ஷாக் கொடுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.....
மொபைல் கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறையை பொறுத்தவரையில் தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவை தவிர்த்து வோடபோன், பி.எஸ்.என்.எல் நிறுவனங்களும் உள்ளன.
தற்போது, அனைத்து நிறுவனங்களுமே 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.இதனால், அதிகளவில் இத்தொழில்நுட்பத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக, ஒரு மொபைல் இணைப்புக்கான சராசரி வருமானம் குறைந்துள்ளதாகவும், அதனை ஈடுகட்டும் நோக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் கட்டணங்களை வெகுவாக உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளன.
25 சதவீகிதம் வரையில் மொபைல் கட்டணத்தை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 25 % கட்டணங்களை உயர்த்தும்போது அவை ஒரு இணைப்புக்கான சராசரி வருமானத்தை 16% அளவுக்கு உயர்த்தும் என சொல்லப்படுகிறது. இதனால், 5ஜி முதலீட்டு செலவை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது.
25% உயர்வு என்பது உதாரணமாக, 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் திட்டமாக இருந்தால், அதன் புதிய விலை 125 ரூபாயாக இருக்கும். இந்த விலை உயர்வு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் என கருதப்படுகிறது.