கவனம்..! G Pay, Phone Pay மூலம் கல்வி உதவித்தொகையா...? பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை...!
ஜி பே, போன் பே மூலம் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடியான ஒன்று என பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி செயல்பாடுகளுக்காகவும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா பிற திறமைகளுக்காகவும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளும் தனியாரும் இந்த உதவித்தொகையை வழங்குகின்றன. இவை தவிர்த்து சமூக ரீதியாகவும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், ஓடிபி எண்களை சில மோசடிக்காரர்கள் கேட்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி பே, போன் பே ஆகியவற்றில் உதவித்தொகை அனுப்பப்படும் என்று மோசடியாளர்கள் கூறி, ஓடிபி எண்ணைப் பெற்று மோசடி செய்து வருகின்றனர் என பள்ளி கல்வித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போனில் அழைத்து கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி, வங்கி கணக்கு மற்றும் ஒடிபி கேட்கும் நபர்களை நம்ப வேண்டாம். அரசு பள்ளிகளில் வழங்கும் கல்வி உதவித்தொகையானது எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி நலத்துறைகள் மற்றும் சமூக நலத்துறை மூலம் நேரடியாகவே மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. ஜி பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் உதவித்தொகை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படுவதில்லை.
எனவே ஜி பே, போன் பே மூலம் உதவித்தொகை அனுப்புவோம் என வரும் அழைப்புகள் மோசடியான ஒன்று என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.