’இனி கூட்டுறவு வங்கிகளிலும் கல்விக்கடன்’..? அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன குட் நியூஸ்..!!
கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், “2022-23ஆம் ஆண்டில் ரூ.14,500 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.16,500 கோடி பயிர்கடன் வழங்க இலக்கை முதல்வர் தெரிவித்திருக்கிறார். மகளிர் சுய உதவிக் குழு கடன் கடந்தாண்டை விட தற்போது 2 மடங்காக உயர்த்தி வழங்கப்படுகிறது.
உணவு தானியங்களுக்கு கூடுதல் கிடங்கு இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதற்காக மத்திய அரசு பாராட்டு சான்றிதழையும் வழங்கியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்படுமா என கேட்கிறீர்கள். இதுவரவேற்க கூடிய ஒன்றுதான் என்றாலும், இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்றார்.