"எடப்பாடி பழனிச்சாமி துரோகி.. ஜெயக்குமார் மனநிலை சரியில்லாதவர்" - பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்ப்பரித்த ஓபிஎஸ்.!
அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலுக்காக புதிய கூட்டணி மற்றும் வியூகம் அமைக்கும் பணியில் பரபரப்பாக இயங்கி வருகிறது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேர்வு குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே எழுந்த கருத்து வேறுபாடை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பன்னீர் செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் அவருக்கு கட்சியின் லெட்டர் பேடு, கொடி மற்றும் சின்னம் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற பெயரில் இயங்கி வருகிறார். மேலும் இவரது தலைமையிலான குழு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியை சிதைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தக்க பதில் கொடுப்பார்கள் எனவும் கூறினார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தயவு ஆட்சி செய்து விட்டு இன்று அவர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி என்பதை நிரூபித்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளார். பாரம்பரியமிக்க அதிமுகவின் பொதுச்செயலாளராகி அந்தக் கட்சியை பல துண்டுகளாக இபிஎஸ் உடைத்து வருவதாக பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். அவர்கள் செய்த துரோகத்திற்கு எல்லாம் மக்கள் தேர்தலில் தக்க படிப்பினையை கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். வரும் காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக எழுச்சி பெறும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் அந்தக் கட்சியின் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மனநிலை சரியில்லாத ஒரு போல் பேசி வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருக்கிறார்