டெல்லியில் பரபரப்பு...! 10 பணி நேர விசாரணை... பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி MLA-வை கைது செய்த ED...!
டெல்லி வக்பு வாரியத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு அமலாக்க இயக்குனரகம் நேற்று இரவு கைது செய்தது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
அமானதுல்லா கான் மீதான பணமோசடி வழக்கு மத்திய புலனாய்வுப் அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமானதுல்லா கான், தான் வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருந்தபோது, விதிகளை கடைபிடித்ததாக கூறினார். 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வாரியத்தை நிர்வகிக்கும் புதிய சட்டத்தின்படி தான் சட்டக் கருத்துக்களைக் கேட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறினார்.
முன்னதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் ED சோதனை நடத்தியது. டெல்லி வக்ஃப் வாரியத்தில் சட்ட விரோதமாக பணியாளர்களை ஆட்சேர்ப்புக்கு பணம் ரொக்கமாகப் பெற்றதாகவும், அசையா சொத்துக்களை தனது கூட்டாளிகளின் பெயரில் வாங்க முதலீடு செய்ததாகவும் மத்திய விசாரணை நிறுவனம் கூறியுள்ளது.