Karnataka | காங்கிரசுக்கு எதிராக பாஜக சித்தரித்த வீடியோ.!! உடனடியாக நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.!!
Karnataka: முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட வீடியோவை கர்நாடக பாஜக தனது X வலைதளத்தில் பதிவு செய்திருந்தது. இந்த காணொளியை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக பாஜகவால் X தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை மீறுவதாக கூறிய தேர்தல் ஆணையம் அதனை X தளத்திலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாஜக வெளியிட்ட அனிமேஷன் வீடியோவில் ஒரு கூட்டில் மூன்று முட்டைகள் வைக்கப்படுகின்றன. அவற்றில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி என எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டில் மேலும் ஒரு முட்டை சேர்க்கப்படுகிறது. அந்த முட்டையில் முஸ்லிம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்கும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா ஆகியோர் முஸ்லிம் பறவைக்கு மட்டும் உணவு அளிப்பது போன்று வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக(Karnataka) காங்கிரஸ் இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, சமூக வலைதளப் பொறுப்பாளர் அமித் மாளவியா, மாநிலத் தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை சமூக வலைதளங்களில் விரட்டுவது போன்று பாஜக செயல்படுகிறது என தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியை இஸ்லாமிய ஆதரவு கட்சி போன்று சித்தரிப்பதற்காக இந்த வீடியோவை பாஜக வெளியிட்டது எனவும் தெரிவித்தனர்.