’கற்களை சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது’..!! பயனருக்கு AI கொடுத்த வினோத பதில்..!!
கூகுள் தேடல் அம்சத்தில் கிடைக்கும் AI Overview தொடர்ந்து தவறான தகவல்களை வழங்குவதாக சமூக வலைதளங்கள் மூலம் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தடம் பதிவிட்டது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இந்நிலையில், கூகுள் அதன் சமீபத்திய I/O 2024 விழாவில் அதன் பயனர்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.
அதாவது, கூகுள் தேடுதல் (Google Search) அம்சத்தில் பயனர்களின் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சமான AI Overview வசதியை வழங்குவதாக அறிவித்தது. பல பயனர்கள் பயன்படுத்திய நிலையில், அதுகுறித்த விமர்னங்களும் அதிகரித்து காணப்படுகிறது. கூகுள் தேடல் அம்சத்தில் கிடைக்கும் AI Overview தொடர்ந்து தவறான தகவல்களை வழங்குவதாக சமூக வலைதளங்கள் மூலம் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பீட்சாவில் பசையை சேர்த்து சாப்பிடும்படியும், கற்களை சாப்பிடும்படியும் Google AI Overview பரிந்துரை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் முதன்முதலில் எக்ஸ் தளத்தில்தான் எழுந்தது. எக்ஸ் பயனரான Peter Yang என்பவர், "Cheese பீட்ஸாவில் ஒட்டுவதில்லை" என கூகுள் தேடலில் தேடியுள்ளார். அதற்கு கூகுளின் AI Overview, 'விஷமில்லாத பசையை பயன்படுத்தலாம்' என பதில் அளித்துள்ளது. தொடர்ந்து மற்றொரு பயனர், ”எத்தனை கற்களை தினமும் சாப்பிடலாம்' என கேட்டதற்கு AI Overview வினோதமான மற்றொரு பதிலை அளித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு கல்லையாவது சாப்பிடலாம் என்றும் அதில் கனிமம் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் செரிமான ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது என பதில் அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மற்றொரு சர்ச்சையையும் கூகுளின் AI Overview கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் இஸ்லாமிய அதிபர்கள் குறித்து கேட்டதற்கு, அது பராக் ஒபாமாவை பதிலாக கூறியுள்ளது. ஒபாமா இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர் அல்ல. இருப்பினும் இதுசார்ந்த புரளிகள் சமூக வலைதளங்களில் இருப்பதையொட்டி இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறு தவறான தகவல்களை அளிக்கும் AI Overview அம்சத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் எனவும், அந்த அம்சத்தை தற்சமயம் நீக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்த கூகுள், “இந்த தவறுகள் அனைத்தும் பொதுவாக மிக அரிதான கேள்விகளுக்கே ஏற்பட்டுள்ளது என்றும் இதுபோன்று குறைந்த நபர்களுக்கே நடந்துள்ளது" என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.
Read More : TNPSC தேர்வில் இப்படி ஒரு குளறுபடியா..? கொந்தளித்த ராமதாஸ்..!! உடனே உத்தரவிடுங்க..!!