"பரிசாக கிடைத்த மீன்.. பறிபோன உயிர்."! 'பஃபர் ஃபிஷ்' சாப்பிட்டு பலியான பிரேசில் இளைஞர்..!! பரிதாப சம்பவம்.!
பஃபர் ஃபிஷ் என்றழைக்கப்படும் கோள மீனை முறையாக சுத்தப்படுத்தி சமைக்காததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரான மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் என்பவருக்கு கோளமீனை பரிசாக வழங்கியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு நண்பர்களும் மீனை சமைத்து எலுமிச்சை சாறுடன் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாய் மறத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் மேக்னோ செர்ஜியோ கோம்ஸ். அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். பஃபர் ஃபிஷ் என்றழைக்கப்படும் கோளமீனில் 'டெட்ரோடோடோக்ஸின்' என்ற அரிய வகை விஷம் நிறைந்திருக்கிறது. இது ஒரு சில கடல் வாழ் உயிரினங்களில் காணப்படும் விஷத்தன்மையாகும்.
கோளமீனை முறையாக சுத்தம் செய்து சமைக்காததால் அதில் உள்ள விஷத்தின் தாக்கத்தில் மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோல மீன் சுவையானது என்றாலும் அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.