இனி உளுந்து இல்லாமல் சுவையான மெது வடை செய்யலாம்... எப்படி தெரியுமா??
இந்தியாவில் அநேகரால் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் வடை. வடை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த வகையில், பருப்பு வடை, உளுந்த வடை மற்றும் வெங்காய வடை என பல வகையான வடைகள் உள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழலில் அநேகர் தங்களின் வீடுகளில் வடை செய்வது இல்லை. பண்டிகை நாட்களில் கூட கடையில் ஆர்டர் செய்து வாங்கி விடுகின்றனர். ஆனால் நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் வடைகள் சுத்தமாக இருக்குமா என்று கேட்டால் அது கேள்வி குறி தான். இதனால் குழந்தைகளுக்கு நாம் கடையில் வாங்கும் வடையை யோசித்து தான் குடுக்க வேண்டும். இதற்க்கு நீங்கள் வீட்டிலேயே சுத்தமான வடையை சுலபமாக செய்து குடுக்கலாம். ஆனால் அதற்காக இனி நீங்கள் உளுந்த மாவை ஊற வைத்து ஆட்டி எடுக்க தேவையில்லை. உளுந்து இல்லாமலேயே மெது வடை செய்து விடலாம்.
ஆம், இதற்க்கு முதலில், ஒரு அகன்ற பாத்திரத்தில் பச்சரிசி மாவு, மோர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து விடுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். மிதமான தீயில் அடுப்பை வைத்துக்கொண்டு, கடாயில் இந்த மாவு கலவையை போட்டு கெட்டி ஆகாத படி, கிளறிக் கொண்டே இருங்கள். இப்போது அதில், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் சிறிது சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். வடை மாவு பதத்திற்கு வந்த உடன், மாவை ஆற வைத்து விடுங்கள். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து வடை சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடான உடன், நாம் கலந்து வைத்த மாவை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்துவிடுங்கள்.
இரு புறமும் நன்கு வெந்த பின்பு, வடையை எடுத்து விடலாம். இப்பொது சூடான சுவையான வடை தயார்..