காதுகள் நிரந்தரமாக கேட்காது..!! விவசாயிகளை ஒடுக்க அதிநவீன ஆயுதம்..!! டெல்லியில் பரபரப்பு..!!
மத்திய பாஜக அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க அதிநவீன ஆயுதங்களை டெல்லி போலீசார் கையில் எடுத்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2020-21இல் உலகை உலுக்கும் வகையில் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானது, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது, தங்களை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமைகளாக்குபவை என்பதால் அந்தப் போராட்டம் நடைபெற்றது.
டெல்லி எல்லைகளில் ஓராண்டு காலம் தங்கி, கடும் பனி, குளிர், வாட்டி வதைத்த வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடினர். இதனால் மத்திய அரசு தமது பிடிவாதத்தைக் கைவிட்டு 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. பிரதமர் மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது, விவசாய விலை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அரசு தந்தது.
ஆனால் மத்திய அரசு தங்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதனையுமே நிறைவேற்றவில்லை என்பது விவசாயிகள் குற்றச்சாட்டு. இதனால் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் டெல்லி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்தனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். ஆனால் பஞ்சாப் மாநில விவசாயிகள் அனைவரும் ஹரியானா எல்லையில் அம்மாநில அரசால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் பஞ்சாப்- ஹரியானா எல்லையான சம்பு பகுதியிலேயே விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். சம்பு பகுதியை தாண்டி டெல்லி நோக்கி விவசாயிகள் முன்னேறிவிடாமல் தடுக்கும் வகையில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. கான்கிரீட் தடுப்புகள், ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதே போல டெல்லி எல்லைகளிலும் மிக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால் ஹரியானா எல்லையான சம்புவில் போலீசார் அமைத்த கான்கிரீட் தடுப்புகள் உள்ளிட்டவைகளை தகர்த்து டெல்லி நோக்கி முன்னேற விவசாயிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். விவசாயிகளை கண்காணிக்க டிரோன்களும் பறக்கவிடப்பட்டன. அந்த டிரோன்களை செயல்படவிடாமல் தடுக்க பட்டங்களையும் விவசாயிகள் பறக்கவிட்டனர். இந்நிலையில், டெல்லி நோக்கி வரும் விவசாயிகளை ஒடுக்க டெல்லி போலீசார் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்த ஆயுதத்தின் பெயர் Long Range Acoustic Devices- Crowd Control Sound Cannons. சோனிக் ஆயுதம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்த சோனிக் ஆயுதமான அதீதமான ஒலியை எழுப்பக் கூடியது. எதிரில் இருப்பவர்களின் காதுகளின் கேட்கும் திறனை முழுமையாகவும், நிரந்தரமாகவும் முடக்கும் அபாயம் கொண்டது. இத்தகைய சோனிக் ஆயுதங்களைத்தான் தற்போது டெல்லி போலீஸ் கையில் எடுத்துள்ளது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதுதான் Long Range Acoustic Devices என்கிற இந்த சோனிக் ஆயுதங்கள். டெல்லியில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க டெல்லி போலீசார் 2013ஆம் ஆண்டு இத்தகைய 5 சோனிக் ஆயுதங்களை வாங்கினர். இதன் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.