இறப்பு மேலே யாருக்கு தான் பயம் இல்லை.. எவ்வளவு காசு கொடுத்தாலும் அந்த சீன்ல மட்டும் நடிக்கவே மாட்டேன்..!! - டெல்லி கணேஷ்
தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகனாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 80 வயதாகும் அவர், நேற்று இரவு 1 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேல் கலை அனுபவம் கொண்ட இவர் வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர்.
இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1980-களில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வந்தார். 1979 இல் பாசி படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசைப் பெற்றார். 1994 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய கலைமாமணி மாநில விருதுகளையும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.
400க்கும் மேற்பட்ட படங்களில் எல்லாவித கேரக்டர்களிலும் நடித்த டெல்லி கணேஷ் எவ்வளவும் பணம் கொடுத்தாலும் இறந்து போனது போன்ற சீனில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக முன்னதாக ஒரு பேட்டியில் டெல்லி கணேஷ் கூறியதாவது, எவ்வளவு பணம் கொடுத்தாலும் இறந்து போகிற மாதிரி சீன் எல்லாம் வைத்தால் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.
யாரையோ படுக்க வைத்து மாலை போட்டுக்கொள்ளுங்கள்.. என்னை படுக்க வைத்து மாலையை போடுவது, அழுவது எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டேன்.. நீங்க கொடுக்கிற காசுக்கு அதெல்லாம் பண்ண முடியாது என சொல்லிவிடுவேன். நிறைய காசு கொடுத்தால் பண்ணுவீர்களா என்று கேட்பார்கள்.. எவ்வளவு கொடுத்தாலும் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். இறப்பு மேலே யாருக்கு பயம் இல்லை. இந்த தேதியில் இறந்துவிடுவேன் என சொன்னால் பயப்படாதவர்களே இருக்க மாட்டார்கள். இறப்பு என்பது திடீரென்று வருவதுதான்.. மரணம் என்பது நிரந்தரம். அது தெரியாத வரைக்கும் நாம ராஜா" என்றார்.
Read more ; கர்ப்பிணிகளே கவனம்!! இந்த தவறை செய்வதால் பனிக்குடம் உடையும் அபாயம் உள்ளது..