2026-ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை... உறுதி செய்த துரை வைகோ...!
எங்களைப் பொறுத்தவரை வருங்காலங்களிலும் திமுகவுடன் தான் கூட்டணி என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று எந்த முதலீட்டையும் ஈர்க்கவில்லை. மாறாக அமெரிக்காவில் சென்று சைக்கிள் ஓட்டிவிட்டு வந்திருக்கிறார். சென்னையில் கார் ரேஸ் நடத்துவது அவசியமா? என கேள்வி எழுப்பிய எடப்பாடி, " விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயம் நடத்தி என்ன சாதித்துவிட்டார். கார் ரேஸ் நடத்தியதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாணது. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என விமர்சனம் செய்தார்.
திமுக கூட்டணிக்குள் ஏற்கனவே குழப்பம் வந்துவிட்டது. திமுக அரசு கூட்டணியால் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டணி மட்டும் இல்லையென்றால் திமுக அவ்வளவு தான். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது. வலுவான கூட்டணி அமைத்து அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும். தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அது. நிச்சயம் மக்கள் விரோத ஆட்சி செய்யும் திமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்திற்கு பதில் அளித்துள்ள மதிமுக எம்பி துரை வைகோ மதிமுகவை கூட்டணிக்கு அழைக்க வேண்டுமென்ற ஆசை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. தலைவர்கள் மாறுவார்கள். பிரச்னை வரும் என்பது எடப்பாடியின் விருப்பம். எங்களைப் பொறுத்தவரை வருங்காலங்களிலும் திமுகவுடன் தான் கூட்டணி என துறை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.