ஜெட் வேகத்தில் உயரும் சின்ன வெங்காயம் விலை.. உரிக்காமலேயே கண்ணீர் வருதே..!!
தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத தக்காளி பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து, பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து சின்னவெங்காயம் தினசரி 300 டன் வருகிறது. இன்று காலை மார்க்கெட்டுக்கு 150 டன் சின்ன வெங்காயம் வந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் 50 ரூபாயில் இருந்து 120 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாயில் இருந்து 38 ரூபாய்க்கு குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளில் ஒரு கிலோ சின்னவெங்காயம் 150 ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டு வருகிறது.