ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம்.. பாதிக்கப்பட்ட இரயில் சேவை..!! இதுவரை 10 பேர் பலி
ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் சேதமடைந்து இரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகேநேற்று அதிகாலையில் கரையைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு, குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள்அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக பெரும்பாலான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால், 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் தென் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், 6 ரயில்களின் வழித்தடங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, விஜயவாடா, அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் விஜயவாடா-காசிபேட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆந்திரம் வழியாக தமிழ்நாடு, கேரளம் வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதாக இருந்த பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் சில ரயில்கள் ரத்து செய்து திங்கள்கிழமை காலை தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கனமழையினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more ; மகிழ்ச்சி செய்தி..! குறை தீர்க்கும் காலக்கெடு 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைப்பு…!