அடுத்தடுத்து சிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்…! 14 பாகிஸ்தானியர்கள் கைது..! குஜராத்தில் ரூ.3,400 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!
கடந்த சில நாட்களாக அதிக அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடல் வழியாக போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுவது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (ஏப்.27) குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 'BREAKING BAD' வெப் சீரிஸ் பாணியில் போதைப் பொருள் தயாரிப்பு கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த போதைப்பொருள் தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ எடையிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானியர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தனர். சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
கடந்தாண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் இருந்து 12,000 ரூபாய் கோடி மதிப்பிலான 2,500 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை என்.சி.பி. கைப்பற்றியது. அதேபோல, கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் குஜராத்தில் கடலோர போலீசாரால் இதுவரை ரூ.3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தில் வழக்கில் சிக்கியது பேசு பொருளானது. இந்த நிலையில் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போதைப்பொருள் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.