செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது தான்.. ஆனா கவனமா இல்லன்னா அது நச்சு நீராக மாறலாம்..!
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். செம்பு குடம் அல்லது பாத்திரத்தில் தண்ணீரை சேமித்த்து குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் இது வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது என்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும். முன்கூட்டியே வயதாகும் தோற்றம் ஏற்படும் வாய்ப்பும் குறைவு.
இதனால் பலரும் தற்போது செம்பு பாட்டில்கள், செம்பு ஜக் அல்லது செம்பு குடம் ஆகியவற்றில் தண்ணீர் சேமித்து குடித்து வருகின்றனர். ஆனால் அதே நேரம் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லை எனில் அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆம், நீங்கள் செம்பு பாத்திரத்தில் தவறான முறையில் தண்ணீர் குடித்தால், அது நன்மைகளை வழங்குவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். ஏனென்றால், சில நேரங்களில் செம்பு பாத்திரங்களில் உள்ள தாமிரம் தண்ணீரில் கலந்து நச்சுகள் உருவாகலாம். இது பல வழிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் முக்தா வசிஷ்ட் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். எதையும் அதிகமாக உட்கொள்ளும் போது, அது நல்ல பொருளாக இருந்தாலும் கூட தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “ நமது எலும்புகள், மூளை, தோல், திசுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு தாமிரம் அவசியம். தாமிரத்தின் தினசரி உட்கொள்ளல் சுமார் 10 மில்லிகிராம் ஆகும். நாம் தாமிரத்தை குறைவாக உட்கொண்டால், அது மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும், நரம்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.
ஆனால் மறுபுறம், அதிகப்படியான தாமிரம் உடலின் பல்வேறு பகுதிகளில் குவிந்து, அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கப்படும் போது, அதில் தாமிரம் கசிகிறது. அது சிறிய அளவில் இருந்தால் தீங்கு விளைவிக்காது.
ஆனால் பாத்திரத்தை முறையாக சுத்தம் செய்யவில்லை எனில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இந்த நீர் உடலில் நுழையும் போது, அது உடல் உறுப்புகளையும் பாதிக்கலாம்.” என்று கூறினார்.
அழுக்கான செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால் உடலில் நச்சுகள் சேரும் என்று டாக்டர் வசிஷ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் “ இந்த நச்சுகள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து மூளை, நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இது வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும். நச்சுத்தன்மை வாய்ந்த நீரை தொடர்ந்து உட்கொள்வதால் தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படலாம். மேலும் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம்.
செம்பு பாத்திரத்தை தினமும் சுத்தம் செய்து அதன் நீரை குடித்து வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பலரும் தங்கள் செம்பு பாத்திரங்களை வாரத்திற்கு ஒரு முறை அல்லது அழுக்கு தெரிந்தால் மட்டுமே சுத்தம் செய்வார்கள், ஆனால் இந்த பழக்கம் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே செம்பு பாத்திரங்களை உப்பு மற்றும் எலுமிச்சை கொண்டு தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இது தினசரி வழக்கமாக மாற வேண்டும். மேலும் ஒரு செம்பு பாத்திரத்தில் சூடான நீரை ஒருபோதும் சேமிக்க கூடாது. சூடான நீர் தாமிரத்தை விரைவாகக் கரைத்து, தண்ணீருக்குள் நுழையும் அளவை அதிகரிக்கிறது. இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
குறிப்பாக குளிர்காலங்களில், செம்பு பாத்திரங்களில் சூடான நீரை சேமித்து வைப்பதை தவிர்க்கவும். எப்போதுமே அறை வெப்பநிலையில் தண்ணீரை சேமித்து 6-7 மணி நேரத்திற்குள் உட்கொள்ளவும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம், எந்த ஆபத்தும் இல்லாமல் செம்பு பாத்திரத்தின் நீரின் நன்மைகளை பெறலாம்.” என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Read More : வாக்கிங் போகும் போது இந்த தவறுகளை செய்தால்… எந்த பயனும் இல்லை.. ஆபத்தாக கூட மாறலாம்..