மறந்தும் கூட இந்த நேரத்தில் டீ குடிக்க வேண்டாம்!! எச்சரிக்கை விடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்..
பலருக்கு உணவை விட மிக முக்கியமானது டீ அல்லது காபி தான். ஒரு சிலருக்கு என்ன தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு எப்படியாவது டீ அல்லது காபியை குடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு சாப்பிட்ட உணர்வே இருக்காது. சிலருக்கு வீட்டில் இந்த பழக்கம் இல்லை என்றாலும், ஹோட்டல்களுக்குச் சென்றால், கட்டாயம் காலை அல்லது இரவு உணவுக்குப் பின்னர் டீ/காஃபி அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்படி சாப்பிட்டு விட்டு டீ அல்லது காபி குடிக்கவில்லை என்றால் சரியாக செரிமானம் ஆகாது என்ற கதையையும் கூறுவது உண்டு. ஆனால், இப்படி சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கலாமா?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஎம்ஆர்), உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் அல்லது காபி குடிப்பது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கப் காபியில், 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. மேலும், ஒரு கப் இன்ஸ்டன்ட் காஃபியில் 50-65 மி.கி. காஃபின் இருக்கும். ஒரு கப் தேநீரில் 30-65 மி.கி. காஃபின் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்பு சத்து நமது உடலுக்கு செல்ல விடாமல் தடுக்கிறது.
இரும்பு உறிஞ்சப்படுதலைத் தடுக்கும் டானின்கள் டீ மற்றும் காபியில் உள்ளது. இதனால், சாப்பிட்டவுடன் டீ / காபி குடிக்கும் போது உடலானது மற்ற உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுதலில் தடையை டானின்கள் ஏற்படுத்துகிறது. ரத்த உற்பத்திக்கு முக்கியமான ஒன்று என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் டீ அல்லது காபியை சாப்பிட்ட உடன் குடிப்பதால் ரத்த சோகை ஏற்படலாம். இதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும், சாப்பிட்ட ஒரு மணி நேரம் பின்னும் டீ / காபியை குடிக்க வேண்டும்.