யானையின் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற மூன்று பேர் அதிரடியாக கைது...!
சென்னை வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த, ரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, இரண்டு யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்ட மூன்று பேரை, மடக்கி விசாரித்ததில், அவர்களிடம் இரண்டு யானைத் தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் 50வது பிரிவின்படி, 21.63 கிலோ எடையுள்ள இரண்டு யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டு கைப்பற்றப்பட்டதுடன், அதை விற்க முயன்ற மூன்று பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட தந்தங்கள் மற்றும் கைதான 3 நபர்களும், மேல் நடவடிக்கைகளுக்காக தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சர்வதேச எல்லைகளில் கடத்தல் தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னணியில் இருக்கும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 1, 2023 முதல் புதிதாக திருத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வனவிலங்கு பொருட்களை பறிமுதல் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.