வரதட்சணை கொடுமை..!! பூச்சி மருந்து குடித்து மருமகள் தற்கொலை..!! மாமனார், மாமியார் அதிரடி கைது..!!
வரதட்சணை கொடுமை செய்ததாக மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மத்திய காவல் படை சப் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் (65). இவரது மகன் கயல் வேந்தன் (32). இவருக்கும், அருள் பிரகாசம் என்பவரது மகள் கயல்விழிக்கும் (29) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கயல்வேந்தன் அந்தமானில் வேலை பார்த்து வரும் நிலையில், கயல்விழி தனது கணவர் குடும்பத்தினருடன் மோவூர் கிராமத்தில் வசித்து வருகிறார். கயல்விழி திடீரென நேற்று இரவு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கயல் விழியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அதைத் தொடர்ந்து அவரது தாயார் மகாலட்சுமி (49) காட்டுமன்னார்கோவில் போலீசில் புகாரளித்தார். அந்தப் புகாரில் தன் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மாமனார் செங்குட்டுவன் (65), மாமியார் பானுமதி (60) ஆகியோர் தனது மகளை வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், கயல்விழி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக சேத்தியாதோப்பு துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து கயல்விழி மரணத்திற்கு காரணமாக இருந்த அவரது மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதி ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.