”இந்த சாதாரண கேள்விக்கே உங்களிடம் பதில் இல்லையா”..? அனல் பறக்கும் செந்தில் பாலாஜி வழக்கு..!! இன்று மீண்டும் விசாரணை..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை இதுவரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளன. மேலும், அவருக்கான நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக விசாரணையின் போது கைப்பற்றியதாகச் சொல்லப்படும் பென் டிரைவிற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் சொல்லப்பட்டது. நேற்றைய விசாரணையில் இது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என்று செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், "செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்ற ஆவணங்கள் எங்கே? இந்த சாதாரண கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து பதில் இல்லை.
கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் கூடுதல் ஆவணம் எப்படி வந்தது? சோதனையின் போது பென் டிரைவில் குறிப்பிட்ட தரவுகள் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே" எனக் கேள்வி எழுப்பினர். டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம்பெற்று இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த கூறிய நீதிபதிகள், இந்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் இருப்பது ஏன்? என்றும் இது மிக மிகச் சாதாரண கேள்வி என்றும் தெரிவித்தனர்.
இருப்பினும், இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் உரியப் பதிலை அளிக்கவில்லை. இதையடுத்து, இன்று பதில் வழங்க முடியவில்லை என்றால் வழக்கை நாளை தள்ளி வைக்கிறோம். நாளை பதிலோடு வாருங்கள் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை, இன்றைய (ஜூலை 25) தினத்திற்கு ஒத்திவைத்தனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Read More : இந்த பூஜையை செய்தால் உங்கள் வீட்டில் எப்போதும் பணம் இருக்கும்..!! என்ன செய்ய வேண்டும்..?