கடந்த கால வெற்றிகளை மறந்துவிடாதீர்கள்!. விமர்சனங்களுக்கு சரியான பதிலடி!. ரோகித் ஷர்மா காட்டம்!
Rohit sharma: இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது. இந்த டெஸ்ட் தோல்விக்கு பிறகு, இந்த நூற்றாண்டில் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளை இழந்த இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 15 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார்.
இந்திய அணியின் இந்த தொடர் தோல்வியின் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து இந்திய அணி விளையாட உள்ள 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியதையடுத்து, கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில், புனே டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோகித் ஷர்மா அளித்த பேட்டியில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு அனைவரும் பொறுப்புடன் விளையாட வேண்டும்.
சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்கள் 18 தொடர்களில் தொடர்ந்து வெற்றி பெற உதவிய 2 வீரர்களால் மட்டும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது. எனவே அந்த இருவரை நான் அதிகமாக பார்க்கப் போவதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் மோசமான போட்டிகள் இருக்க அனுமதிக்க வேண்டும். அப்போது மற்ற வீரர்கள் அசத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும்”
“அந்த வகையில் அஸ்வின் ஜடேஜா அசத்தாத போது சுந்தர் அல்லது அக்சர் அல்லது குல்தீப் அசத்துவார்கள். எனவே வெற்றி அவர்களின் பகிரப்பட்ட பங்களிப்பால் கிடைக்கும். ஆம் இம்முறை சுந்தர் சிறப்பான போட்டியை கொண்டிருந்தார். ஆனால் நாம் 500 மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களைப் பற்றி பேசுகிறோம். அவர்களுக்கு அந்த விக்கெட்டுகளை எப்படி எடுத்தோம் என்பது தெரியும்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் அவர்கள் விக்கெட்டுகள் எடுத்து எங்களுக்கு வெற்றியை கொடுத்தனர். எனவே அனைத்து நேரங்களிலும் அவர்கள் விக்கெட்டுகள் எடுப்பார்கள் என்பது எதிர்பார்ப்பது கடினம்” என்று கூறினார். மேலும், தோல்வி குறித்து அதிகபிரசங்கிதனமாக கருத்து வெளியிட விரும்பவில்லை. இந்திய அணியின் கடந்த கால வெற்றிகளை மறக்கவேண்டாம் என்று கூறிய ரோகித் ஷர்மா, இதே அணிதான் கடந்த காலங்களில் பல வெற்றிகளை பெற்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று காட்டமாக பேசியுள்ளார்.
Readmore: நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!.