”மாறி மாறி குறை சொல்லாதீங்க”..!! ”ஆகுற வேலையை பாருங்க”..!! கமல்ஹாசன் பேட்டி..!!
மிக்ஜாம் புயலின் தாக்கத்தில் சென்னையில் பெய்த பெருமழையால் மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. டிச. 4, 5ஆம் தேதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடிந்தாலும், புறநகர் பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், “எதிர்பார்த்த அளவை விட அதிகமான பாதிப்பு சென்னையில் இருக்கிறது. இப்போது நாம் குறை சொல்லிக் கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்வது நம் கடமையாகும். அப்படித்தான் நாங்கள் இருந்து இருக்கிறோம். கோவிட் காலத்தில் கூட இந்த வீட்டை கோவிட் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவதற்காக கொடுக்க தயாராக இருந்தேன். அதற்கு உடனே கிடைத்த எனக்கு பதில் என்னவென்றால், இந்த வீடு கோவிட் நோய் தொற்றுள்ள வீடு என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டு போய்விட்டார்கள்.
இந்த மாதிரி இடைஞ்சல்கள் எனக்கு புதிது கிடையாது. நாங்கள் ரொம்ப நாளாக அனுபவித்து வருகிறோம். 40 ஆண்டுகளுக்கு முன்னாள் பெயர் தெரியாத சின்ன கூட்டமாக இருந்த போது கூட எங்களுக்கு தொந்தரவு வந்தது. ஆனால், இப்போது மக்களுக்கு உதவுவது என்பதை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசை விமர்சிப்பது நாம் அப்புறம் செய்யலாம். நாம் செய்ய வேண்டியது ஒரு விஷயம்தான். வல்லுனர்களுடன் அமர்ந்து இந்த மாதிரி பேரிடர்கள் வரும் போது அப்போதைக்கு தற்காத்துக்கொள்வது எப்படி என்று பிறகு நீண்ட கால திட்டங்கள் என்ன தீர்வு என்ன என்று ஆராய வேண்டும். தற்போதைய நிகழ்வு பருவ நிலை மாற்றம் என்று உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்வு.
இங்கே மட்டும் எதோ திடீரென வந்து விட்டது என்று இல்லை. வடநாட்டிலும் இருக்கு இங்கேயும் இருக்கு. 20 செ.மீட்டர் வந்தால் கூட நாங்கள் தாங்கி கொள்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளோம் என பெருமையாக பேசி வந்தார்கள். ஆனால் வந்தது என்னமோ 24 மணி நேரத்திற்கு 56 செ.மீட்டர் பெய்துள்ளது. இதற்கு மாறி மாறி குறை சொல்வதை நிறுத்த வேண்டும். குறை சொல்லும் படலத்தை பிற்பாடு வைத்துக் கொள்ளலாம். அரசு இயந்திரம் 1 கோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியம் இல்லை. எனவே, நாமும் நமக்கு தேவையான முன்னேற்பாடுடன் உதவி செய்ய வேண்டும்” என்று கூறினார்.