மோப்ப சக்தியால் பெண்கள் கர்ப்பமாவதை கண்டுபிடிக்கும் நாய்கள்..!! இந்த அறிகுறிகளை கவனிச்சிருக்கீங்களா..?
பழங்காலத்தில் இருந்தே நாய்கள் மனிதர்களுக்கு ஒரு சிறந்த துணையாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு நல்ல துணை மற்றும் விளையாடுவதற்கு ஒரு அன்பான உயிரினம் என்பதையும் காட்டி நாய்கள் நமக்கு மிகவும் நேர்மையானவை என்பது நமக்கு தெரியும். நமக்கு ஏதாவது தீங்குகள் ஏற்பட்டாலும் தன்னுடைய உயிரை கொடுத்தாவது நம்மை பாதுகாப்பதில் நாய்களை அடித்துக் கொள்ள முடியாது.
அதிலும் நாம் ஏதாவது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட அதில் நமக்கு எப்படி உதவுவது என்பதையும் நாய்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும். உதாரணமாக ஒருவேளை நீங்கள் கர்ப்பமாக இருந்து, ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நாய்கள் அதனை நன்றாக புரிந்து கொள்ளும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பங்களை நாய்களால் கண்டுபிடிக்க முடியும். நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை மோப்ப சக்தி மூலமாக கண்டறிந்து நாய்கள் கர்ப்பத்தை தெரிந்து கொள்கின்றனர். உங்களுடைய நாய்க்கு நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு சில அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
* வழக்கத்தை விட நாய்கள் உங்கள் மீது அதிக அன்பாகவும், பாதுகாப்பாகவும் நடந்து கொள்ளும்.
* நீங்கள் எங்கு சென்றாலும், ஏன் குளிக்க சென்றால் கூட உங்களை நாய்கள் பின் தொடர்ந்து வரும்.
* எப்போதையும் விட உங்கள் நாய் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்களை அதிகப்படியாக கொஞ்சும்.
* நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது வழக்கத்தைவிட அதிகமாக நாய் சிணுங்குவதை நீங்கள் கவனிக்கலாம்.
* கர்ப்பமாக இருக்கும் உங்களை கதகதப்பாக வைப்பதற்காக நாய்கள் உங்கள் மடியில் அடிக்கடி வந்து அமர்ந்து கொள்ளும்.
* நீங்கள் படுத்திருக்கும்போதும் உங்களை பாதுகாப்பதற்கு உங்கள் மெத்தைக்கு கீழ் நாய்கள் படுத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
நாய்களை அருகில் வைத்திருப்பது பாதுகாப்பானதா..?
நாய்கள் பொதுவாக நமக்கு அதிகப்படியான மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடிய பிராணிகள். அவர்களுடைய அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துவதற்காக வளர்ப்பவர்கள் மீது தாவி குதிப்பது அவர்களுடைய வழக்கம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், நாய்கள் அதிக ஆற்றலுடன் நம் மீது தாவி குதிக்கும்போது அதனால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்களுடைய நாய் நீங்கள் சொல்வதைக் கேட்டு அமைதியாக அமரக்கூடிய ஒரு பிராணியாக இருந்தால் அதனைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
கர்ப்பமாக இருக்கும்போது நாய் வளர்க்க ஆசையா..?
உடற்பயிற்சி :
உங்களுடைய நாய்க்கு சலிப்பு தட்டாமல் இருப்பதற்கு அவர்களை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சளிப்படைந்து விட்டால் அதனால் அவர்களுடைய நடத்தையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பயிற்சி :
குதிப்பது அல்லது கத்துவது போன்றவற்றை நிறுத்துவதற்கு உங்கள் நாய்க்கு பயிற்சி கொடுங்கள். குழந்தை வந்த பிறகு எந்தெந்த அறைக்குள் நுழையக்கூடாது என்பதையும் நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சங்கிலி :
எப்பொழுதும் நாய்களின் கழுத்தில் சங்கிலி மாட்டி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பெரிய நாய்கள் :
பெரிய நாய்கள் தவறுதலாக உங்களுடைய வயிற்றில் குதித்து விட்டால் நிலைமை மோசமாகும். எனவே, அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.