சம்பளம் போட்ட உடனேயே செலவாகிவிடுகிறதா..? அப்படினா இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..!!
நேற்று தான் சம்பளம் போட்டார்கள். இன்று ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லை என்று புலம்புவோரின் எண்ணிக்கை இங்கு ஏராளம். அதிலும், சொந்த ஊரை விட்டு வந்து வெளியூரில் வேலை பார்ப்பவர்களின் நிலைமையை பற்றி சொல்லவா வேண்டும். இந்த பணக்கஷ்டம் நம் எல்லோருக்கும் இருந்தாலும், நம்மில் சிலர் நிறைய செலவு செய்யும் பழக்கத்தை வைத்திருப்போம். நீங்களும் அப்படி செலவு செய்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.
அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம்
நமக்கு ஒரு பொருள் வேண்டுமென்று இருக்கும் அல்லது தேவை என்று இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் தேவைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். வேண்டும் என நாம் நினைக்கும் பொருட்களை எப்போது வேண்டுமானலும் வாங்கிக் கொள்ளலாம். அது தீரப்போவதும் இல்லை. அழியப்போவதும் இல்லை. அதனால், தற்போதைக்கு அதில் செலவிடும் பணத்தை சேமிக்கலாம்.
பட்ஜெட்
உங்கள் ஊதியம் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதில் என்னென்ன செலவுகளை செய்யப்போகிறீர்கள் என்றும் தெரியும். முதலில் அதற்கான செலவுகளை பட்டியலிடுங்கள். அதற்கான பணத்தை தனியாக எடுத்து வையுங்கள். அது போக உங்களிடம் இருக்கும் பணத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்துங்கள். மாதம் முடிகையில், இந்த செலவுகளையும் கணக்கிடுங்கள். அப்படி செய்யும்போது தேவையற்ற செலவுகள் என்ன என்பது தெரிந்துவிடும். அதனை அடுத்த முறை குறைத்துக்கொள்ளலாம்.
பணம் அல்லது டெபிட் கார்ட்
கிரெட் கார்ட் பயன்படுத்துவதில் உள்ள ஒரு ஆபத்து, இப்போது செலவு செய்துவிட்டு பின்னர் பணம் கட்டி கொள்ளலாம் என்பது தான். இதுவே நம் செலவுகளை நீடித்துவிடும். அதற்கு பதிலாக டெபிட் கார்டையோ அல்லது கையில் இருக்கும் பணத்தையோ செலவிடுங்கள். இந்த வகையில், நம்மிடம் கணக்கும் இருக்கும், அதிக செலவும் ஆகாது.
செலவுகள் மீது கவனம்
என்ன செலவாகிறது என்பதை கண்காணியுங்கள். முன்பே சொன்னது போல தேவை, வேண்டியது என உங்களது செலவுகளை பிரியுங்கள். அதற்கேற்றார் போல செலவிடுங்கள். உங்களுக்கு ஒரு முறைக்கு மேல் அந்த பொருளின் தேவை இல்லை என்றால் அதனை வாங்குவது குறித்து மறந்துவிடுங்கள்.
சேமிப்பு
அந்த மாதத்திற்கான செலவினை பட்டியலிடும்போதே, சேமிப்புக்காக ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிடுங்கள். அதனை அத்தியாவசிய செலவின் பட்டியலில் வைத்தால் தான் மாதம் தவறாமல் அந்த சேமிப்பு தொகை சேரும். இந்த பழக்கத்தை அலட்சியமாக விடவேண்டாம்.